புதுடெல்லி: கடந்த 1974ம் ஆண்டு மே 18ம் தேதி பொக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. இதன் 51வது ஆண்டு நிறைவையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘நமது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் புத்திசாலித்தனம், அர்ப்பணிப்பு மூலம் இந்த அசாதாரண சாதனையை எட்டினர்.
அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முன்மாதிரியான, துடிப்பான தலைமையை வெளிப்படுத்தினார். பல இன்னல்களை எதிர்கொண்டாலும் மகத்தான துணிச்சலை வெளிப்படுத்தினார். இது என்றென்றும் நிலைத்திருக்கும் மரபு. ஜெய்ஹிந்த்’’ என கூறி உள்ளார். பொக்ரான் அணுகுண்டு சோதனை நாட்டின் அறிவியல் திறன் மற்றும் வலுவான அரசியல் தலைமையின் அடையாளமாக மாறியதாக ராகுல் காந்தி புகழ்ந்துள்ளார்.