நன்றி குங்குமம் தோழி
பட்டையை கிளப்பும் வெட்டிங் ஈவென்ட் துறை
மாலையில் ரிசப்ஷன் காலையில் கல்யா ணம் என்கிற கான்செப்ட் எல்லாம் இப்போதைய டிரெண்டில் சுத்தமாக இல்லை. மஞ்சள் வெளிர்நிற மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஆபரணங்களை மணப்பெண் அணிய, உறவினர் கூடி, மணமகள் தலையில் சல்லடை வழியே மஞ்சள் நீராட்டி, ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி நடத்துகிற ஹல்தி பங்ஷன் நிகழ்ச்சியாகட்டும்..!அடுத்த நாள் காலை உறவுப் பெண்களும், மணமகள் தோழிகளுமாக ஒன்றிணைந்து மருதாணி இட்டு, ஆடல் பாடலுடன் நடத்தும் மெஹந்தி நிகழ்ச்சியாகட்டும்..!
திருமணத்தை நடத்தும் சம்பந்தி வீட்டாருடன், தாத்தா, பாட்டி, நண்டு சிண்டு உள்பட உறவினர்கள் ஜோடி ஜோடியாய் மேடை ஏறி ஆடுகிற சங்கீத் நிகழ்ச்சியாகட்டும்..!
‘‘இப்போதெல்லாம் திருமணங்கள் குறைந்தது மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு வடமாநிலங்களைப் போலவே களைகட்ட ஆரம்பித்திருக்கிறது’’ எனப் பேச ஆரம்பித்தவர், 11 ஆண்டுக்கு மேல் இத்துறையில் கால்பதித்து, 1500க்கும் மேற்பட்ட திருமணங்களை விதவிதமான மேடை அலங்காரத்துடன், வண்ணமயமாய் நடத்திவரும் “கணையாழி” மேரேஜ் ஈவென்ட் நிறுவன இயக்குநர் ஸ்ருதிஸ்ரீ.
‘‘மூன்று நாள் நிகழ்ச்சிகளுக்குப் பிறகே மாலையில் ரிசப்ஷன் காலையில் திருமணம் என்கிற கான்செப்டிற்குள் நுழைகிறார்கள். திருமணத்தில் ஏற்கனவே நாம் செய்து கொண்டிருந்த விஷயங்களோடு, உறவினர் கூடி மகிழ்ச்சியை மேலும் கூட்ட என்னவெல்லாம் இருக்கிறதோ அவற்றை தேடித்தேடி செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இந்தக் கொண்டாட்டங்கள் மூலம் எங்கள் பிள்ளைகள் திருமணத்தை இருவீட்டாரும் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நடத்தி வைக்கிறோம் என்பதை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வெளிப்படுத்துகின்றனர்’’ என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
‘‘என் 18 வயதில் பெண் தொழில்முனைவோராக வெட்டிங் ஈவென்ட் துறைக்குள் நுழைந்தபோது, பெண்களே இல்லாத துறையாக இது இருந்தது. கூடவே சில எதிர்வினைகளும் இருந்தன. ஒரு சின்னப் பெண்ணை நம்பி எப்படி திருமண வேலைகளை செய்வதென வாடிக்கையாளர்களும், என்னிடம் வேலை செய்பவர்களும் யோசித்தனர். “நீ சொல்றதெல்லாம் சரிம்மா போயி உன் ஓனரைக் கூட்டீட்டு வா” என்கிற மாதிரி பார்த்தனர். அதெல்லாம் ஒரு காலம்(சிரிக்கிறார்). இதை ஓவர்கம் செய்து வெளியில் வரவே துறை சார்ந்த அறிவை அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஃபீல்டின் டெப்தில் நின்று என்னை வளர்த்துக் கொள்ளும் சூழலே பெரும்பாலும் இருந்தது. இதனால் பிறருக்குத் தெரியாத புரொடக் ஷன் விஷயங்களும் தெரிய ஆரம்பித்தது. சுருதிக்கு எல்லாமும் தெரியும் என்கிற உணர்வு முதலில் என் ஊழியர்களுக்கும், பிறகு என் வாடிக்கையாளர்களுக்கும் வரவர, மேரேஜ் ஈவென்ட் தொழிலில் நான் நிலைக்க ஆரம்பித்தேன். ஈவென்ட் மேனேஜ்மென்ட்டில் நிறைய பிரிவுகள் உண்டு. மொத்தமாக ஆர்டரை எடுத்து வென்டாரிடம் பிரித்துக் கொடுத்தும் செய்யலாம்.
அல்லது ஒரு துறையில் மட்டுமே கவனத்தை செலுத்தலாம். இதில் என்னுடையது, திருமண வீட்டாருக்கு பிடித்த மாதிரியான மேடை அலங்காரத்தை அவர்கள் பட்ஜெட்டிற்குள் உருவாக்கிக் கொடுப்பது. சுருக்கமாய் சினிமா செட் டைரக்டருக்கு இணையான வேலை இது. ஒரு செட்டை செயற்கையாய் உருவாக்கி திருமணம் முடிந்ததும், அப்படியே பிரித்து எடுத்து ஹாலை பழைய நிலையில் ஒப்படைக்க வேண்டும்.
தனித்துவமான இந்தப் பயணத்தில், ஒரு செட் இயக்குநராய், இந்த வேலையை இப்படிச் செய் எனச் சொல்லும் இடத்தில் பெண்கள் குறைவு’’ என்கிற ஸ்ருதி, ‘‘அந்த இடத்திற்கு 10 வருடத்திற்கு முன்பே நான் நுழைந்து, நிலைத்து நிற்கிறேன்’’ என விரல் உயர்த்துகிறார்.‘‘வித்தியாச வித்தியாசமான கான்செப்ட்களில் மேடை அலங்கார செட்களை செய்வதே எங்கள் மெயின் கோர். மணமக்களிடம் நேர்காணல் செய்து, அவர்களின் விருப்பம் அறிந்து, அதற்கான பொருட்களை சேகரித்து, செட்டில் உள் தீம்களில் அவற்றைக் கொண்டு வருவோம். ஒருமுறை செய்த செட்டை மீண்டும் உருவாக்குவதில்லை. இது எங்கள் பாலிசி.
கடினமான வேலைகளை ஆண்கள்தான் செய்வார்கள். பெண்களால் முடியாது என்கிற எண்ணத்தை தகர்த்து, இரவு பகல் பார்க்காமல், பெண்களும் இத்துறையில் நிமிர்ந்து நிற்கிறோம். அதிகபட்சம் 3 மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிற துறை என்பதால், மீதி 21 மணி நேரமும் ஓடி… ஆடி… நின்று… நடந்து பார்க்கும் வேலையாகவே இது இருக்கும். இரவு 2 மணி என்றாலும் களத்தில் நின்று வேலைகளை முடித்துவிட்டுதான் பெண் ஊழியர்களோடு நானும் வீட்டுக்குச் செல்கிறேன்.
மிகச் சமீபத்தில் நடைபெற்ற சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் சார் மகள் திருமணத்தில், தமிழ் முறைப்படி குறிஞ்சி, முல்லை, மருதம் நில அமைப்புகளை செட்டில் கொண்டு வந்தோம். திருமணத்திற்கு வந்த சின்னத்திரை பிரபலங்கள் பலரும் எங்களை அழைத்து வெகுவாய் பாராட்டினர். அதேபோல் நடுக்கடலில் இரண்டு கப்பலில் செட்டுக்கு நடுவே சூரியன் தெரிகிற மாதிரி ஒரு செட்டை உருவாக்கிக் கொடுத்தோம்.
6 மணி வரவேற்பு நிகழ்ச்சிக்கு 3 மணிக்கு ஒப்படைக்கப்படும் ஹாலில், அடுத்த 3 மணி நேரத்தில் கான்செப்டைக் கொண்டுவருகிற ஸ்கெட்ச் தயாராக இருக்கும். கூடவே செட்டுக்கான பொருட்களையும் சேகரித்து வைத்திருப்போம். துரிதகதியில் செட் வேலைகள் விறுவிறுவென நடைபெறும். இதில் டிசைனிங் டீம், ப்ரீ புரொடக் ஷன் டீம், எக்ஸ்க்யூஷன் டீம் வேகவேகமாய் செயல்படுவார்கள்.கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்படும் டிசைனிங் பார்ட்டே இதில் மேஜர் வொர்க். பெரும்பாலும் பெண்கள்தான் இதில் பணியாற்றுகிறார்கள். ஒருசில சாஃப்ட்வேர் மூலமாக செட்டை டிசைன் செய்து, கலர் கொடுத்து, மொத்த அவுட் லுக்கையும் கையில் கொடுத்துவிடுவார்கள்.
ப்ரீ புரொடக் ஷன் வேலைகளுக்கு புரொடக் ஷன் எக்ஸ்க்யூட்டிவ்ஸ், ஈவென்ட் கோ ஆர்டினேட்டர்ஸ் இருக்கிறார்கள். தவிர, மார்க்கெட்டிங் டீம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் டீமும் இருக்கிறது. இதுதவிர்த்து அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலரும் உண்டு.டேட் அவலய்பிளிட்டி பொறுத்தே எண்ட் டூ எண்ட் ஹனிமூன் பேக்கேஜ் உள்பட ஃபுல் வெட்டிங் பேக்கேஜ்களையும் நாங்கள் செய்து கொடுக்கிறோம். இதற்கு 4 மாதங்களுக்கு முன்பே ஆர்டருக்கான உறுதியை கொடுக்க வேண்டும்.
இது தவிர்த்து ஒரு நாளைக்கு நான்கு ஸ்டேஜ் டெக்ரேஷன்ஸ் கூட வித்தியாச வித்தியாசமான கான்செப்டில் செய்து கொடுக்கிற அளவுக்கான மேன்பவர் என்னிடம் இருக்கிறது’’ என்ற ஸ்ருதி, ‘‘Event management is nothing but crisis management…’’ எனப் புன்னகைக்கிறார். ‘‘அதிலும் கடைசி நேர க்ரைசிஸ் சமாளிப்பதுதான் தொழிலில் உள்ள சவாலே. அப்பவெல்லாம் கிட்டதட்ட ஒரு போதி தர்மர் மாதிரி ரொம்பவே நிதானமாக செயல்படணும்’’ என்றவாறு மீண்டும் புன்னகைத்து விடைகொடுத்தார் .
கேஷுவலாக தொடங்கிய தொழில் இது…
‘‘எனக்கு அப்பா இல்லை. அம்மா வழக்கறிஞர். நாகப்பட்டினம் அருகே நாகூரில் சிறிய கிராமம் என்னுடையது. அங்குதான் என் பள்ளிப் படிப்பு இருந்தது. 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால், திருச்சி இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றில் ஸ்காலர்ஷிப்போடு இலவசமாக +2 வரை படித்தேன்.பிறகு சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படித்ததில் ஊடகங்கள் குறித்த புரிதல் கிடைத்தது. படிக்கும்போதே சினிமா இயக்குநராகும் கனவில் 26 குறும்படங்களை ஒரே ஆண்டில் எடுத்து முடித்தேன். பிறகு நடிகர் பார்த்திபன், தம்பி ராமையா போன்றவர்களிடமும் பணியாற்றினேன்.
சினிமாத் தொடர்புகள் இருந்த காரணத்தினால் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு பி.ஆர்.ஓவாக என்னை நியமித்தனர். என் கடுமையான உழைப்பால் கல்லூரித் தேர்தலில் சேர்மன் அண்ட் கல்சுரல் செகரெட்டரியாகவும் தேர்வானேன். கல்லூரி வளாகத்தில் செயல்படும் பிற துறைகளின் நிகழ்ச்சிகளின் பொறுப்பும், ஒருங்கிணைப்பு பணிகளும் என்னிடமே வழங்கப்பட்டது. 18 வயதில் சினிமாத் துறைக்குள் ஒரு பெண் வலம் வருவது சுலபமானதாய் இல்லை என்பதால், சினிமா மோகத்தில் இருந்து வெளியில் வந்து அடுத்து என்ன செய்யலாம் என யோசித்ததில்..? கல்லூரி நிகழ்ச்சிகளை சிறப்பாக நான் எடுத்துச் செய்ததை தோழிகள் நினைவூட்டினர்.
2014ல் விசிட்டிங் கார்டுடன் சின்ன அலுவலகம் தொடங்கி, ஆர்டர்களை பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் அம்மா, பாட்டி எல்லாம் ‘இதெல்லாம் வேலையா?
டபுள் டிகிரி முடிச்சு ஏதாவது அரசு வேலைக்கு முயற்சி செய். இல்லையா வெளிநாடு சென்று படி. அதுவும் முடியாதுன்னா கல்யாணத்தைப் பண்ணிக்க’ எனச் சொல்ல ஆரம்பித்தனர். இன்று என் ‘மேரேஜ் ஈவென்ட் நிறுவனம்’ க்ரோர்களில் டேனோவர் ஆகிறது.
தொடர்ந்து இத்துறையில் நான் நிலைத்திருப்பதால், ‘கணையாழி’ என்கிற பெயரில் ஒரு மெயின் ஆபீஸ், இரண்டு கொடவுன்கள், ஒரு பார்ட்டி ஹால் எனக்கு இருக்கிறது. 17 பேர் நிரந்தர ஊழியர்களாக என்னிடம் பணியாற்றுகிறார்கள். இவை தவிர்த்து, நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் தினக்கூலி ஊழியர்களாக 150 முதல் 200 நபர்களை வேலையில் ஈடுபடுத்துகிறேன்.
‘கணையாழி’ என்பது முத்திரையுடன் கூடிய மோதிரத்தை குறிக்கும் சொல். நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் முத்திரை மோதிரம் தலைவி, தலைவனுக்கு இடையே ஒரு முக்கியபொருளாக இருந்த காரணத்தால், இருவரை இணைக்கும் அடையாளமான மோதிரத்தை முன்னிறுத்தி கணையாழி என்ற பெயரை நிறுவனத்திற்கு சூட்டினேன்.
இயல்பிலே பெண்கள் கிரியேட்டர்ஸ்…
‘‘தமிழகத்தில் ஈவென்ட் இன்டஸ்ரீயில் 10 % பெண்கள் கூட தலைமைத்துவப் பதவியில் இல்லை என்பதே வருத்தம். இந்தத் துறையில் வேலை வாய்ப்புக்கான தேவைகளும் அதிகமாக இருக்கிறது. ஆனால் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பெண்கள் தயாராக இல்லை. படிக்காத அன் ஆர்கனைஸ்ட் செக்டாரில் துணிக்கடையில் மட்டும்தான் வேலை செய்வேன் என்று பெண்கள் நினைக்காமல், ஈவென்ட் மேனேஜ்மென்ட் இன்டஸ்ட்ரீயில் டெக்கார் வேலைகளைச் செய்ய அதிகம் முன்வர வேண்டும்.
காரணம், பெண்கள் இயல்பிலே கலை ஆர்வம் மிக்கவர்கள். தங்கள் வீடுகளை அலங்கரிப்பதிலும், பராமரிப்பதிலும் அதிகம் சிரத்தை எடுப்பவர்கள். எனவே பெண்கள் இத்துறைக்குள் நுழைந்தால் ஜொலிப்பார்கள். பெண்கள் விரும்பும் சுதந்திரம், மரியாதை, கண்ணியம் கிடைக்க வேண்டுமென்றால், தொழில்முனைவோராக முயற்சித்தால் மட்டுமே சாத்தியம்.’’
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்