சென்னை: திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்றபோது, மிஷினில் இருந்து பணம் வரவில்லை. ஆனால், பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் மட்டும் வந்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி மேலாளர் நரேன்குமார், ஏடிஎம் மிஷினை சோதனை செய்தபோது, பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து வெளியே பணம் வராமல் தடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள், கள்ளச்சாவி மூலம் ஏடிஎம் மிஷினை திறந்து, பணம் வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்ததும், வாடிக்கையாளர்கள் இந்த மிஷினில் பணம் எடுக்க முயன்று, பணம் வராமல் சென்றவுடன், சிறிது நேரத்தில் அந்த மர்ம நபர்கள் வந்து, அந்த கருப்பு அட்டையில் சிக்கிய வாடிக்கையாளரின் பணத்தை எடுத்து செல்வது தெரிந்தது.
இதுகுறித்து நரேன்குமார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த குல்தீப் சிங் (26), பிரிட்ஜ் பான் (30), சுமித் யாதவ் (33) ஆகிய 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், அந்த 3 பேரையும் நே்றறு கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஏடிஎம் மிஷினை கள்ளச்சாவி மூலம் திறந்து, பணம் வரக்கூடிய இடத்தில் ஒரு கருப்பு நிற அட்டையை வைத்து விட்டு சென்றதும், பின்னர், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்றபோது பணம் வெளியில் வரமால் இந்த கருப்பு அடைக்குள் சிக்கியதும், பின்னர் இவர்கள் வந்து அந்த பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற கொள்ளை சம்பவத்தில் அதிகளவில் ஈடுபட்டு, உடனடியாக வாடகை கார்களில் ரயில் நிலையம் சென்று சொந்த ஊர்களுக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுதது, மூவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து கள்ளச்சாவி, கருப்பு நிற ஸ்டிக்கர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.