சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கன முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. நவ.11, 12ம் தேதிகளில் தமிழ்நாட்டின் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவ. 12, 13ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்றில் இருந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த 5 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும், மழை காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.