சென்னை: ‘தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைவெயில் முடிவுக்கு வர உள்ளது. அதேநேரத்தில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்க உள்ளது. அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைய காலதாமதம் ஆகிறது. அதன் தொடர்ச்சியாக கரூர், மதுரை மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. கோவை, கன்னியாகுமரி, சேலம், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிரித்துள்ளது.
இதன் காரணமாக வேலூரில் நேற்று 106 டிகிரி (பாரன்ஹீட்) கொளுத்தியது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல, ஜூன் 1, 2 மற்றும் 3ம் தேதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் இவ்வாறு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.