சிட்னி: தடகள வீராங்கனையை கொன்ற வழக்கில் கைதான நபர் சிறைக்குள் முகச்சவர ரேஸரை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மத்திய கடற்கரையில், ‘ஐயன்வுமன்’ தடகள வீராங்கனையான ஆட்ரி கிரிஃபின் (19) என்பவர், கடந்த மார்ச் 24 அன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் எரிந்தா க்ரீக் என்ற ஓடையில் பாதி மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக டாரன்ஸ் (53) என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஆட்ரி கிரிஃபின் விடுதி ஒன்றிலிருந்து தனது தந்தையின் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டாரன்ஸை எதிர்கொண்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட டாரன்ஸ், போதைப்பொருள் பழக்கத்தால் கடந்த ஐந்து நாட்களாகத் தூங்காமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால், சில்வர்வாட்டர் சிறையில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பின் கீழ், தற்கொலை செய்துகொள்ள முடியாத சிறப்பு ஆடைகள் அணிவிக்கப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், சக கைதியுடன் ஒரு அறைக்கு மாற்றப்பட்ட அவர், அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காகச் முகச்சவரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஒரு ரேஸரை வாங்கியுள்ளார். ஆனால், மறுநாள் விடுமுறை என்பதால் நீதிமன்றம் செயல்படவில்லை. அந்த ரேஸரைக் கொண்டு, கடந்த ஏப்ரல் 24 அன்று அவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்த அதே நேரத்தில், கிரிஃபினின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவருக்காக நினைவேந்தல் நடத்திக்கொண்டிருந்தனர். டாரன்ஸின் தற்கொலையால், தங்கள் மகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்காமற் போனதே என கிரிஃபினின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். டாரன்ஸின் முன்னாள் மனைவி கூறுகையில், ‘அவர் என்னைக் கொல்லத்தான் வந்தான்; ஆனால் வழியில் சிக்கிய கிரிஃபினைக் கொன்றுவிட்டார்’ என்று வேதனையுடன் கூறினார்.