Tuesday, June 24, 2025
Home மகளிர் சமூக வலைத்தளம் மூலம் வருமானம் ஈட்டும் தடகள வீராங்கனை!

சமூக வலைத்தளம் மூலம் வருமானம் ஈட்டும் தடகள வீராங்கனை!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

2025 ஏப்ரல் இறுதி வாரம் தேசிய கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் கொச்சியின் பிரபல கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற பஞ்சாபின் நிஹாரிகா வஷிஷ்ட் மற்றும் ‘ஜேஎஸ்டபிள்யூ’வின் தடகள வீராங்கனையும் கேரளத்தைச் சேர்ந்தவருமான சாண்ட்ரா பாபு இருவருக்கும் இடையே டிரிபிள் ஜம்ப் போட்டி மிகவும் கடுமையாக உருவானது. தனது இரண்டாவது முயற்சியில் 13.42 மீட்டர் மட்டுமே குதித்த சாண்ட்ரா அடுத்த கட்டமாக ஐந்தாவது முயற்சியில் தனது தூரத்தை 13.48 மீட்டராக மேம்படுத்தினார். ஐந்து தாவல்களிலும் சாண்ட்ராவை விட பின்தங்கிய நிஹாரிகா, தனது ஆறாவது முயற்சியில் 13.49 மீட்டர் தூரம் எட்டினார். இந்த சாதனை அவரை தங்கப்பதக்கம் பெறும் தகுதியை வழங்கியது.

கடந்த பிப்ரவரி மாதம் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெற்றி பெற்றதிலிருந்து நிஹாரிகா ஒவ்வொரு போட்டியிலும் தனது தனிப்பட்ட உச்சத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். நிஹாரிகாவைச் சந்தித்த போது…

‘‘எனது நுட்பமும் தாவுதலும் எப்போதும் நன்றாக இருந்தாலும், எனது ஓட்டம் பலவீனமானதாகவே இருந்தது. தொடக்கத்தில் நான் வேகமாக ஓடினாலும், தொடர்ந்து வேகத்தை அதிகரிக்கவோ அல்லது அதே வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளவோ என்னால் இயலவில்லை. அதனால் ஒரு ஸ்பிரின்ட் பயிற்சியாளரின் உதவியுடன் எனது ஓட்ட வேகத்தை வேகப்படுத்தி வருகிறேன்” என்று கூறும் நிஹாரிகா வஷிஷ்ட் சமூகவலைத்தளத்தில் இன்ஃப்ளுயன்சராகவும் இருந்து வருகிறார்.

நடிகைகள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களுக்கான ஒரு வருமானத்தினை சம்பாதித்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் பதிவுகள் போடுவதன் மூலமாக கணிசமாக சம்பாதித்தாலும் அதனை பிரபலங்கள் வெளியே பகிர்வதில்லை. ஆனால் ஒரு இன்ஃப்ளுயன்சராக இருக்கும் நிஹாரிகாவை இணையத்தில் பின்தொடர்பவர்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகம். நிஹாரிகாவின் சிறப்பு ட்ரிபிள் ஜம்ப்பில் சாதனை படைப்பது மட்டுமல்ல… தனது சொந்த பயிற்சி செலவுகளுக்குத் தேவைப்படும் செலவினை தனது ஊடகக் கணக்கிலிருந்து சம்பாதித்துக் கொள்கிறார். அந்த வருவாயை அவர் விவேகத்துடன் பயன்படுத்துகிறார் என்பதுதான் சந்தோஷம் தரும் விஷயம்.

ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள் மற்றும் பிராண்ட் ஒத்துழைப்புகளைப் பெறுவதற்கு அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தைப் பயன்படுத்திக் கொள்வதாக பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்.
“சமூக வலைத்தளத்தில் என்னை சுமார் 2,34,000 நபர்கள் பின் தொடர்கிறார்கள். எனது பயிற்சிக்கு நிதியளிப்பதற்கும், விளையாட்டுப் பயிற்சிக்குப் பயன்படும் பொருட்களை வாங்குவதற்கும், எனக்கு தேவையான ஆரோக்கிய உணவுகளை வாங்கவும் பயிற்சி தொடர்பான பயணங்களுக்கு என் வீட்டில் உள்ளவர்களை நான் ெதாந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனை நானே சம்பாதிக்க முடிவு செய்தேன்.

அந்த முயற்சிதான் எனது சமூக வலைத்தள கணக்கை எவ்வாறு உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருக்கிறேன்.எனது தினப் பயிற்சி அட்டவணையைச் சிறிதும் பாதிக்காமல்தான் நான் இதனை கையாண்டு வருகிறேன். கோவிட் ஊரடங்கின் போதுதான் சமூக ஊடகங்களில் பிரபலம் ஆனேன். கொரோனா காலத்தில் மக்கள் கட்டாய ஓய்வில் இருக்கும் போது எனது சுவாரஸ்யமானப் பதிவுகள் மக்களைக் கவர்ந்தன. ரசிகர்களிடத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துபவராக மாறுவது அந்தக் காலகட்டத்தில் எளிதாக அமைந்துவிட்டது.

அரசாங்கத்தின் ஸ்பான்சர்ஷிப் அல்லது நிதி ஆதரவிற்காக காத்திருக்காமல், என்னுடைய சம்பாத்தியம் மூலமாக பல பயிற்சிகளை மேற்கொண்டதால்தான் என்னால் விளையாட்டுத் துறையில் ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. என்னுடைய இந்த சம்பாத்தியம் எனது தடகள வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவதுடன் ஊக்கத்தையும் வழங்கி வருகிறது.

பணம் தேவையைப் பற்றி கவலைப்படாமல், பயிற்சிகளில், போட்டிகளில் முழு மனதுடன் ஈடுபட முடிகிறது. பஞ்சாப், மொஹாலியைச் சேர்ந்த எனக்கு 29 வயதாகிறது. எனது தந்தை எனது தடகள ஆசைகளை நினைவாக்கதான் வேலையினை ராஜினாமா செய்தார். எனது தாயார் மொஹாலிக்கு அருகிலுள்ள கருவானில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். வீட்டுத் தேவைகளுக்கு அம்மாவின் சம்பாத்தியம் அவசியம் என்பதால், கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய பயிற்சிக்காக நான் பெற்றோரை தொந்தரவு செய்யாமல், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எனது பயிற்சிக்காகும் செலவை எதிர்கொள்ள முடிகிறது’’ என்றவர் விளையாட்டுத் துறையில் தன் வெற்றிப் பாதையினை பகிர்ந்தார்.

‘‘கடந்த ஆண்டு புவனேஸ்வரில் நடந்த 27வது தேசிய கூட்டமைப்பு சீனியர் தடகளப் போட்டியில், 13.07 மீட்டர் உயரம் தாவினேன். ஆனால் பெண்களுக்கான ட்ரிபிள் ஜம்பில் 0.01 மீட்டர் வித்தியாசத்தில் பதக்கத்தைத் தவறவிட்டேன். தொடர்ந்து பயிற்சிகள் செய்து எங்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது என கண்டுபிடித்து அதை சரி செய்தேன். அதன் பிறகு என்னால் விரைவான முன்னேற்றங்களை அடைய முடிந்தது. அடுத்து கொச்சியில் நடைபெற்ற போட்டியில் 13.49 மீட்டர் உயரம் தாவி தங்கப்பதக்கம் வென்றேன். நான் எனது அணுகுமுறையை முழுவதுமாக மாற்றியதுதான் எனது முன்னேற்றத்திற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம்’’ என்றார் நிஹாரிகா.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi