சென்னை: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “1972-இல் தலைவர் கலைஞர் செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு_அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, கழக ஆட்சியில் இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன். (https://facebook.com/100044432259627/posts/569084433251431/)
இந்தத் திட்டத்துக்கான பணிகள் 2019-இல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, 1,916.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் விரைவு படுத்தப்பட்டன.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.