ஹசாரிபாக்: ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் யஷ்வந்த் சின்ஹா. ஐஏஎஸ் அதிகாரியான இவர் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசில் நிதித்துறை அமைச்சராகவும், பிரதமர் சந்திர சேகர் அமைச்சரவையில் வௌியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு பாஜ கட்சியில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, 2021ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் தேசிய அளவிலான பெரிய நோக்கத்துக்காக திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகுவதாக கடந்த 2022ம் ஆண்டு அறிவித்தார். இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹா தற்போது புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். யஷ்வந்த் சின்ஹா தலைமையில் நேற்று முன்தினம் மாலை ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, “அடல் விசார் மஞ்ச் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க உள்ளேன்” என தெரிவித்தார்.