கரூர்: கரூர், மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா கோலாகலமாக நேற்று நடந்தது. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டு விழா கடந்த 11ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. 16ல் பூச்சொரிதல் விழா, 18ல் காப்பு கட்டுதல் நடந்தது. கடந்த மூன்று நாட்களாக காலை 7 மணி முதல் இரவு வரை தேரோட்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் என பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நேற்று மாலை 5.15 மணிக்கு நடந்தது. கோயிலில் இருந்து பூசாரி கம்பத்தை எடுத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நிறுத்தினார். பின்னர் பக்தர்களுடன் ஊர்வலமாக கொண்டு, பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள மணல் திட்டில், கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் துாவி பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனித நீரில், கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அமராவதி ஆற்றில் இரவு வாண வேடிக்கை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாண வேடிக்கையை கண்டு களித்தனர்.
இன்று புஷ்ப வாகனம், நாளை கருட வாகனம், 31ல் மயில் வாகனம், 1ல் கிளி வாகனம், 2ல் வேப்பமர வாகனம், 3ல் பின்னமர வாகனத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 8ம் தேதி அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.