திருவனந்தபுரம்: நள்ளிரவில் யாருடைய வீட்டுக் கதவையும் தட்டுவதற்கு போலீசுக்கு அதிகாரம் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பிரசாந்த். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் மீது ஒரு போக்சோ வழக்கு சுமத்தப்பட்டது. விசாரணையில் அவர் குற்றவாளி அல்ல என நிரூபிக்கப்பட்டதால் அந்த வழக்கிலிருந்து பிரசாந்த் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் நள்ளிரவு 1.30 மணியளவில் கொச்சி தோப்பும்படி போலீசார் பிரசாந்தின் வீட்டுக் கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து தோப்பும்படி போலீசார் பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பிரசாந்த் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது: என் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நான் டிஜிபியிடம் ஒரு புகார் கொடுத்திருந்தேன். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் என்னை துன்புறுத்தும் நோக்கத்தில் நள்ளிரவில் போலீசார் என்னுடைய வீட்டுக் கதவை தட்டினர். நான் கதவை திறக்காததால் என் மீது ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியது: ஒவ்வொருவரும் தங்களது வீட்டை கோயிலாகவோ அரண்மனையாகவோ கருதுவார்கள். குற்ற நடவடிக்கை உள்ளவர்களை கண்காணிப்பதாக கூறி நள்ளிரவில் யாருடைய வீட்டுக் கதவையும் போலீசார் தட்டக்கூடாது. அதற்கு போலீசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அனைவருக்கும் கண்ணியத்துடன் வாழ உரிமை உண்டு. இவ்வாறு நீதிபதி கூறினார்.