இந்த உலகம் முழுமையான நன்மை களால் நிரம்பியதோ, முழுமையான தீமைகளால் நிரம்பியதோ அல்ல. அது போல, ஒவ்வொருவர் வாழ்வும் முழுமையான இன்பங்களோடு கூடியதோ அல்லது முழுமையான துன்பங்களோடு கூடியதோ அல்ல. சிலர் சொல்லலாம், ‘‘எனக்கு வாழ்க்கை முழுக்க துன்பம்தான் கொஞ்சமும் சந்தோஷம் என்பதே இல்லாமல் காலம் கழித்துவிட்டேன்’’ என்று.. ஆனால், உற்று நோக்கினால் பல சந்தர்ப்பங்களை அவர்கள் தவற விட்டிருப்பார்கள் என்பதைச் சொல்ல முடியும். இயற்கை அப்படித்தான் வைத்திருக்கிறது. அதோடு ஒரு துன்பத்தைத் தருகின்ற பொழுது அந்தத் துன்பத்தை சந்தோஷமாக மாற்றுகின்ற ஒரு வாய்ப்பும், அந்த துன்பத்திலே பொதிந்து இருக்கிறது. அவர்கள் எதிர்மறை விஷயத்தையே நினைத்துக்கொண்டு விழுந்து கிடப்பதால், அதில் உள்ள நேர்மறை விஷயத்தையோ, வாய்ப்புகளையோ பார்ப்பதில்லை; முயற்சிப்பதில்லை என்பதுதான் உண்மை.
பிரச்னைகளுக்குள்தான் தீர்வுகளும் இருக்கின்றன. தீர்வுகள் செய்யும்பொழுது சில புதிய பிரச்னைகளும் வரத்தான் செய்கின்றன. தங்கு தடையில்லாத ஓட்டம் என்பது எங்கும் கிடையாது. ஓடுகின்ற நீர் ஏதாவது இடத்தில் பள்ளத்தில் விழும்படி ஆகிறது. ஆனால், அப்படி மேலே இருந்து கீழே விழுகின்ற அந்த நீர்தான் புதிய வேகத்தைப் பெறுகிறது. அதற்குப் பிறகு, அது முன்னிலும் வேகமாக ஓட ஆரம்பிக்கிறது.
இதை ஒவ்வொரு ஜாதகத்திலும், கிரக அமைப்பிலும், நடைபெறுகின்ற கிரகங்களின் தசாபுக்தி அந்தரங்களிலும் நாம் காண முடியும். இவைகளை கஷ்டங்கள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. வாய்ப்புகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே நாளுக்குள் நல்ல நேரங்களும் கெட்ட நேரங்களும் வருகின்றன. ஒரு நல்ல செய்தி கிடைத்து, ஆனந்தப்படுகின்றோம். ஒரு நான்கு ஐந்து மணி நேரம் கழித்து வருத்தத்துக்குரிய ஒரு சிறிய நிகழ்ச்சியும் நடப்பதைப் பார்க்கின்றோம். இந்த இயல்பை நாம் புரிந்து கொண்டு, நன்மைகளை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவும், தீமைகளை நன்மை களின் போது பெற்ற சக்தியைக் கொண்டு கடக்கும் இயல்பையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன கதை. ஒரு யாத்திரிகன், மதுரையில் வந்து யாரோ ஒருவர் வீட்டுத் திண்ணையில் ஓய்வெடுக்கிறான். அந்தக்காலத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு ஒவ்வொருவர் வீடுகளின் முன் புறத்தில் திண்ணைகளைக் கட்டிவைத்திருந்தார்கள். இரவில் ஊர் சோதனை செய்வதற்காக மாறுவேடத்தில் வந்த பாண்டிய மன்னன், யாத்திரிகனைப் பார்த்து விசாரிக்கிறார். அப்பொழுது அந்த யாத்திரிகன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் வருகின்றது.
1. ஒருவன் இரவுக்கு வேண்டியதை பகலில் தேடிக்கொள்ள வேண்டும்.
2. மழைக்காலத்துக்கு வேண்டியதை மற்ற மாதங்களில் தேடிக்கொள்ள வேண்டும்.
3. முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக்கொள்ள வேண்டும்.
4. மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்ள வேண்டும்.
இதேதான் ஜாதகத்திலலும் வரும். கெட்ட காலத்துக்கு வேண்டியதை நல்ல காலத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். மழைக்காலம் இரண்டு மாதம் என்றால், மழை இல்லாத பத்து மாதங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன இந்த 10 மாதங்களில் நாம் நமக்கு வேண்டியதைச் சேகரித்து வைத்து விட்டால், அதை வைத்துக்கொண்டு முடங்கிக் கிடக்கக்கூடிய மழைக்காலமாகிய இரண்டு மாதங்களை எளிதாக கடந்து விடலாம் அல்லவா! ஜாதகத்தில், நமக்கு தீமையான திசை நடக்கின்ற பொழுது நன்மையான திசை நடந்த பொழுது, அடுத்து இப்படிப்பட்ட கிரக நிலைகளும் வரும் என்பதை தெரிந்து கொண்டு, சில முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டால், வாழ்க்கையில் எந்த பிரச்னையையும் கடந்து விடலாம். அதற்குத்தான் ஓரளவு ஜாதகஞானம் வேண்டும். இதில் இன்னொரு சூட்சுமத்தையும் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்றான். ஒரு ஜாதகத்தில், 12 கட்டங்களும் தீமையான அமைப்பில் இருக்கவே முடியாது. எப்படிப் பார்த்தாலும் நன்மையான அமைப்புக்கள் சில இருக்கத்தான் செய்யும். ஒன்பது கிரகங்களில், குறைந்தபட்சம் இரண்டு கிரகங்களாவது உங்களுக்கு நற்பலன்களைத் தரக்கூடியதாகவே இருக்கும்.
இப்பொழுது யோசித்துப் பாருங்கள், உங்களுக்குச் சிரமமான ஒரு திசை நடக்கிறது. உதாரணமாக, அஷ்டம திசை (main dasa) நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த அஷ்டம திசைக்குள் புத்திகள் (sub periods) நடக்கின்றன. இந்த புத்திகள் சுழற்சியாக வருகின்றன. எப்படியும் உங்களுக்கு நன்மை தருகின்ற அந்த இரண்டு கிரகங்களின் புத்தியும் வந்து விடுகிறது அல்லவா.. அந்த நேரத்தில் நீங்கள் கொஞ்சம் முயற்சித்து சில ஏற்பாடுகளை செய்துகொண்டால், அல்லது சில செயல்களை தவிர்த்துக் கொண்டால், மற்ற தீமையான தசாபுத்திகளின் காலங்களை கடந்து விடலாம். அதைப் போலவே, நீங்கள் ராசி பலனைப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு தீமையான தசாபுத்திகள் நடக்கின்ற பொழுது ஏதோ ஒரு விதத்தில் சாதகமான பலனுக்குரிய கிரக நிலைகள் அமையும்.அதனால்தான் கிரகங்கள், சதா சுழன்று கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் கும்ப ராசி என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அஷ்டம திசை நடந்து கொண்டிருப்பதால் வழக்கு, வம்பு, தும்பு என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கான நிவாரணத்திற்காக பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், கும்ப ராசிக்கு மூன்றில் சூரியன் வருகின்ற சித்திரை மாதத்தில், நீங்கள் உங்கள் வழக்குகளை தீர்த்துக்கொள்ளும் சில முறையீடுகளை செய்தால், அது உங்களுக்குச் சாதகமாக அமையும்.
காரணம், கும்ப ராசிக்கு மூன்றில் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சத்தில் இருப்பார். அது வெற்றிக்குரிய ராசி. அங்கே அரசாங்கம் ஆன்ம பலம் முதலிய விஷயங்களை குறிக்கக்கூடிய சூரியன் நன்மை தருகின்ற அமைப்பில் இருக்கிறார். குறிப்பாக, கும்பராசிக்கும், மேஷ ராசிக்கும், கடக ராசிக்கும், சிம்ம ராசிக்கும் நன்மை தருகின்ற அமைப்பு என்பதை மறந்து விடக்கூடாது. இந்த ராசியினர் இந்த காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறலாம். எனவே, ஜாதக ஞானம் ஒவ்வொருவருக்கும் அவசியம். ஓரளவு நாமே தெரிந்துகொண்டால், எப்பொழுது எந்த காரியத்தைச் செய்வது, எப்பொழுது எந்த காரியத்தைச் செய்யாமல் இருப்பது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக இல்லாத நிலையில், நீங்கள் எந்த முயற்சியும் செய்யாமல். இருப்பதைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் இருப்பது நல்லது. அதைப் போலவே, கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கின்றபொழுது, நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்குவதும், அந்தக் காலத்தை பொருளாதார ரீதியாகவும் மற்ற முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்வதும் நல்லது. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, நாம் நல்ல காலத்தில் எந்த முயற்சிகளும் செய்யாமலும், தீமையான காலத்தில் அவசர அவசரமாக பல முயற்சிகளை செய்து மாட்டிக்கொண்டு, முழிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதை தவிர்த்துக்கொள்வதற்குதான் ஜாதகம் என்னும் வாய்ப்பை இறைவன் காலக் கண்ணாடியாக கொடுத்து அனுப்பி இருக்கிறான்.