குரு பெயர்ச்சியின் ரகசியங்கள்
வேத ஜோதிடத்தில் குரு மிகவும் மங்களகரமான கிரகம். சுபர் களில் பூர்ண சுபர் குரு. பிறகுதான் சுக்கிரன். குரு அதிர்ஷ்டத்திற்கான கிரகம். நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் நிறைந்த செல்வம் ஆகியவற்றை நிறைவாகத் தரவல்லவர். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குரு வலுவாக இருப்பின் அந்த நபர் எந்த ஒரு கடின நிலையிலும் குருவின் ஆதரவால் நிலையான பலன்களைத்தான் பெறுவார்கள் என்பது ஜாதக விதி.
சுப காரியங்களுக்கு முகூர்த்த நிர்ணயம் செய்யும்போது குரு பலம் பார்த்து நாள் நிச்சயம் செய்வது வழக்கம்.
ஒரு கிரகம் எந்தெந்த வீடுகளுக்கு தன்னுடைய பரல்களைத் தருகிறதோ அந்த வீடு அந்த கிரகத்திற்கு பலம் வாய்ந்த இடமாகும். இதன் அடிப் படையிலேயே கோச்சார பலன்கள் கணிக்கப்படுகின்றன.
இதன்படி கோச்சார குரு, ஜென்ம சந்திரன் நின்ற வீட்டிலிருந்து 2, 5, 7, 9, 11ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது கோச்சார குருபலம் வந்து விட்டதாகப் பொருள்.
ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் குரு பகவான் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் அமர்ந்து இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள்.
தனுசு, மீனம் ராசிகள் குருவிற்கு ஆட்சி வீடு. கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல.
இப்படிப் பல நன்மைகளைத் தரும் குரு விசுவாவசு வருடம், சித்திரை மாதம் 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 1.24 மணிக்கு மிருகசீர்ஷ நட்சத்திரம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார்.
11.5.2025 முதல் 9.6.2025 வரை மிருகசீர்ஷ நட்சத்திரக் காலிலும் குருபகவான் (செவ்வாய் சாரம்), 10.6.2025 முதல் 7.8.2025 திருவாதிரை நட்சத்திரக் காலிலும் குருபகவான் (ராகு சாரம்), 8.8.2025 முதல் 25.5.2026 வரை புனர்பூசம் நட்சத்திரக்காலிலும் குருபகவான் (சுயசாரம்) சஞ்ச ரிக்கிறார். மிதுனம் மற்றும் கடகத்தில் வக்ரம் அடைகின்றார். 26.3.2006 அன்று புனர்பூசம் 4-ம் காலில் முறையாக கடகராசிக்கு குருபகவான் செல்கிறார்.
குரு பெயர்ச்சியில் மட்டும் ஒரு சிறப்பான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். மற்ற கிரகங்களை விட குருவின் பார்வைக்கு மிகுந்த வலிமை உண்டு. அதனால் அவருடைய பெயர்ச்சியை ஸ்தானபலம் அடிப்படையிலும், பார்வை பலம் அடிப்படையிலும் தான் கணக்கிட வேண்டும். உதாரணமாக, மேஷ ராசியை எடுத்துக்கொண்டால், குரு மூன்றாம் இடத்திற்கு மாறுகின்றார். அது மேஷ ராசிக்காரர்களுக்கு சரியான ஸ்தானபலம் கொடுக்காது. ஆரோக்கிய குறைவுகள் கஷ்டங்கள் வரும். ஆனால், அதே குரு மேஷ ராசியின் பாக்கிய ஸ்தானத்தையும், மேஷராசியின் ஏழாவது ஸ்தானத்தையும் மேஷராசியின் லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவதை கவனத்தில் கொண்டால், குருவின் ஸ்தான பலத்தால் ஏற்படும் கஷ்டங்கள் பார்வை பலத்தால் குறையும். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு குருப் பெயர்ச்சி கஷ்டம் என்பதை முழுமையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ரிஷப ராசியை எடுத்துக் கொண்டால் ஸ்தான பலம் அதிகம். குரு இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். பொருளாதாரம் உயரும். குடும்பம் சிறப்பாக இருக்கும். ஆனால் அவருடைய பார்வை ஆறாம் இடத்திலும் எட்டாம் இடத்திலும் படிவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மிதுனராசியை எடுத்துக் கொண்டால் அவர் ஜன்ம ராசியில் இருப்பது தோஷம். அதே நேரம் அவருடைய பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களில் படிவதால் திருகோண ஸ்தானங்கள் பலம் பெறுகிறது. அதனால், நன்மை அதிகம். ஆனால், அதேநேரம் அவர் கேந்திரத்தில் இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷமும் பெறுகின்றார்.
கடகத்தை எடுத்துக்கொண்டால் அவர் விரய குருவாக இருக்கின்றார். அது தோஷம்தான். ஆனால், கடகத்துக்கு ஆறாம் அதிபதியாகவும் இருக்கிறார் அல்லவா. ஆறுக்கு உடையவர் 12-ல் மறைவது எதிர்பாராத நன்மையைத் தரும். அதே நேரத்தில் பாக்யாதிபதி விரயஸ்தானம் ஏறுவதால் சில குறைகளும் ஏற்படும்.
சிம்மராசிக்கு லாபத்தில் குரு வந்து அமர்கின்றார் அதோடு அவர் சப்தம ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு-கேதுவின் வீரியத்தைப் பார்வையால் குறைப்பார். சனியின் ஏழாம் பார்வையால் ராசிக்கு ஏற்படும் தோஷத்தை நீக்குவார். கன்னிராசிக்கு பத்தில் வந்து குரு அமர்கின்றார். புதிய தொழில்களைச் செய்வதை கவனமாகச் செய்ய வேண்டும். புதிய தொழில் முதலீடும் சரியாக வராது. இடப்பெயர்ச்சியும் பிரயாணங்களும் உண்டு. ஆனால் அவருடைய பார்வை தனவிருத்தி தரும். குடும்ப விருத்தியைத் தரும். துலா ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் அமர்வதும் ராசியைப் பார்வை இடுவதும் மிகச் சிறப்பான பலன்களைச் செய்யும்.
விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி அஷ்டமத்தில் அமர்வதால் கஷ்டம் என்று எடுத்துக்கொண்டாலும், அவருடைய பார்வை குடும்ப உறவுகளை வளர்க்கச் செய்யும். தனுசுக்கு ஏழில் வந்து அமர்ந்த குரு, ஸ்தான பலத்தால் நன்மை செய்தாலும், அவருக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மகர ராசிக்கு ஆறில் மறைகிறார். அது தவறுதான். ஆனால், மகர ராசிக்கு 3 – 12 குரியவர் ஆறில் மறைவது விபரீத யோகத்தைச் செய்யும் என்று எடுத்துக்கொண்டு அவருடைய பார்வையும், ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் சனி, ராகுவின் தொல்லைகளைக் குறைக்கும் என்று கணக்கிட வேண்டும்.
கும்பராசிக்கு பஞ்சம கோணத்தில் குரு அமர்ந்திருப்பதும் ராசியைப் பார்ப்பதும் ஜென்ம சனியால் ஏற்படும் தீமைகளைக் குறைக்கும்.மீன ராசிக்கு நான்காம் இடத்தில் குரு அமர்வது நல்லதல்ல. அர்த்தாஷ்டம குரு என்று சொல்வார்கள்.
ஆனால் மீனராசிக்காரர்கள் ராசிநாதனின் (குரு) பார்வையை நம்பி பலன் பெறவேண்டும். குறிப்பாக தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் முன்னேற்றங்கள் லாபங்கள் உண்டு.
எனவே, குரு ஒவ்வொரு ராசிக்கும் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய பார்வையால் நன்மையை கிடைக்கச் செய்யாமல் விடமாட்டார். அதனால்தான் வேறு எந்த கிரகத்துக்கும் சொல்லாத ஒரு பழமொழியை குருவுக்குச்
சொன்னார்கள்.
குரு பார்க்க கோடி புண்ணியம்.
கோடி கிடைக்காவிட்டாலும் நாம் கஷ்டத்தில் ஓடிவிடாமல் சமாளிக்கும் நன்மையாவது செய்வார் அல்லவா. ஒவ்வொரு ராசிக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்யும் கிரகமாக குரு இருப்பதால் அவரை முதல் தர சுப கிரகம் என்று ஜோதிடத்தில் சொன்னார்கள்.