கோபி: தண்ணீர் பாட்டில் வாங்குவதுபோல் நடித்து ஜோதிடர் மனைவியிடம் தாலிக்கொடி பறித்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பங்களாபுதூர் திருமலை நகரை சேர்ந்தவர் பழனி அன்பரசு(65). ஜோதிடரான இவர் பங்களாபுதூர் அத்தாணி சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராசம்மாள்(62). இவர், கடந்த 10.5.2025 அன்று மதியம் மளிகை கடையில் இருந்த போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர், தண்ணீர் பாட்டில் கேட்டு உள்ளார்.
ராசம்மாள் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தபோது, அவரது கழுத்தில் அணிந்து இருந்த 4.5 பவுன் தாலிக்கொடியை பறித்து உள்ளார். ராசம்மாள் தாலிக்கொடியை கெட்டியாக பிடித்துக்கொண்டு சத்தமிடவே, அந்த வாலிபர் தாலிக்கொடியை இழுத்து அறுத்துக்கொண்டு தப்பமுயன்றார். ராசம்மாள் நடத்திய போராட்டத்தில் 2 பவுன் தாலிக்கொடியுடன் வாலிபர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியை வைத்து வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த வாலிபர் பங்களாபுதூரில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் திருப்பத்தூரை சேர்ந்த சிவபிரகாசம்(34) என்பது தெரிய வந்தது. எம்.காம் படித்து உள்ள சிவப்பிரகாசம், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கடந்த சில ஆண்டுகளாக சொந்த ஊரில் விநாயகர் சிலை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது அத்தை பத்மா என்பவருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தையின் சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி செலவழித்துள்ளார்.
இதனால் தொழிலை சரிவர செய்ய முடியாத நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்ய சிவபிரகாசத்திற்கு பணம் தேவைப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கெனவே தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்த ஊட்டிக்கு சென்று நண்பர்களிடம் கடன் கேட்கலாம் என்று பங்களாபுதூர் வழியாக பைக்கில் சென்று உள்ளார்.
அப்போது ராசம்மாள் மளிகை கடையில் தனியாக இருப்பதை பார்த்த சிவபிரகாசம், கடையில் தனியாக இருந்த ராசம்மாளிடம் உள்ள நகையை பறித்துக்கொண்டு விநாயகர் சிலை செய்ய முடிவு செய்து தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பி உள்ளார். மீண்டும் பங்களாபுதூர் சாலையில் கொள்ளையடிக்க வந்த போது தான் நேற்று போலீசில் சிக்கி உள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.