மும்பை: பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், ெசய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘எனது சினிமா வாழ்க்கையில் பாலிவுட்டில் நிறைய நேரம் செலவிட்டேன். எனக்கு அங்குள்ளவர்கள் எப்படி என்று தெரியும். பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளுக்கு நான் செல்லவதில்லை. எந்த நடிகருடனும் நான் பழகுவது இல்லை. பாலிவுட்டில் எனக்கு நண்பர்கள் இல்லை. தொழில் ரீதியாக நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளவில்லை. என்னை பொருத்தமட்டில் நான் பாலிவுட் வகை நபர் அல்ல; அங்குள்ள அனைவரும் முட்டாள்கள்; அவர்களுக்கு மூளையே கிடையாது. சினிமா பார்ட்டிகளில் பிராண்டட் வாட்ச்கள், பைகள், விலையுயர்ந்த கார்கள், ஒருவருக்கொருவர் டேட்டிங் அல்லது உறவைப் பற்றி பேசுகிறார்கள் அல்லது ஒருவருக்கொருவர் உடற்தகுதி பற்றி பேசுகிறார்கள்.
வேறு எதைப்பறியும் பேச மாட்டார்கள். பாலிவுட் பார்ட்டிகளில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் சங்கடமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதுபோன்ற பார்ட்டிகளுக்கு செல்லமாட்டேன். பாலிவுட் நபர்களுடன் என்னால் நட்பு கொள்ள முடியாது. இதனை நான் உறுதியாக கூறுவேன். ஷூட்டிங் இல்லை என்றால், காலையில் எழுந்திருப்பேன்; மதியம் தூங்குவேன்; பின்னர் எழுந்திருப்பேன்; ஜிம்மிற்குச் செல்வேன்; மீண்டும் தூங்குவேன் அல்லது டிவி பார்ப்பேன். இதுதான் எனது பணி அட்டவணை. பார்ட்டிகளில் பாசாங்குத்தனமாக நடந்துகொள்வார்கள். ஃபேன்ஸி மற்றும் வெளிநாட்டுக்காரர்களை போல் ஆங்கிலத்தில் பேசுவார்கள். பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தொழில்சார்ந்த சிலர் உயர்ந்துள்ளனர். ஆனால் அவர்களின் வயது வித்தியாசமாக இருப்பதால், அவர்களுடன் பழகுவதில்லை’ என்றார்.