சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டு்ள்ள அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தலா 10 கல்லூரிகள் வீதம் இரு கட்டங்களாக 20 கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டன. அதன்பின் கடந்த மாதம் 26ம் தேதி 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் திறந்து வைத்திருக்கிறார். கூடுதலாக மேலும் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அடுத்த சில நாட்களில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக தொடங்கப்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலும் மொத்தம் 5 பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும், அவற்றில் ஒரு பாடப்பிரிவுக்கு 56 மாணவர்கள் வீதம் மொத்தம் 280 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 12 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் 420 புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு புதிய உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே செயல்படும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் தான் அயல்பணி முறையில் இந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, சிறந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
உதவி பேராசிரியர்கள் நியமனம் எப்போது? அன்புமணி கேள்வி
0