சென்னை: ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு, நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், அரசு கலை மற்றும் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை எழுப்பினர்.
அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் உதவி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 14ந்தேதி வெளியிட்டது. போட்டித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் மார்ச் மாதம் 28ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கு, 73 ஆயிரத்து 225 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.