நெல்லை: நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர பிஎஸ்சி படிப்புடன் நெட் (தேசிய தகுதித் தேர்வு) அல்லது செட் (மாநில தகுதித் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் நாட்டின் எந்த கல்லூரி, பல்கலைக்கழகத்திலும், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாநிலத்தின் எந்த கல்லூரி, பல்கலைக்கழகத்திலும் உதவிப் பேராசிரியராக பணி புரியலாம். இந்த தேர்வு 43 பாடப்பிரிவுகளில் சிபிடி எனப்படும் கணினி வழியில் நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த தேர்வை நெல்லை மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்காக கடந்த ஏப். 1 முதல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பம் பெறப்பட்டன. விண்ணப்பிக்க மே 15 தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்வு எழுத சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து செட் தேர்வு நாளை(ஜூன்7) மற்றும் ஜூன் 8ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் செட் தேர்வை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.