சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை – உழவர் நலத்துறையில் 158 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு மூலம் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு 158 பேர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் 5 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.