Friday, February 23, 2024
Home » லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தடுத்த விவகாரம் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விசாரணைக்காக ஆஜராகவில்லை: வாரன்ட் பிறப்பிக்க மதுரை போலீஸ் திட்டம்

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தடுத்த விவகாரம் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விசாரணைக்காக ஆஜராகவில்லை: வாரன்ட் பிறப்பிக்க மதுரை போலீஸ் திட்டம்

by Ranjith

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த சென்றபோது அவர்களை தடுத்தது தொடர்பாக 2 முறை மதுரை போலீஸ் சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஆஜராகவில்லை. இதையடுத்து இறுதியாக சம்மன் அனுப்பியும் ஆஜராகா விட்டால் வாரன்ட் பிறப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் அங்கித் திவாரி (32).இவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர் விசாரணை நடத்தாமல் இருக்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதானார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லஞ்சம் வாங்கியதில் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கித் திவாரி பணிபுரிந்த மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனை நடத்த சென்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்தவர்கள் உள்ளே விடாமல் தடுத்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த புகாரின்பேரில், மதுரை தல்லாகுளம் போலீசார் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது பணியில் இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவாலுக்கு, தல்லாகுளம் போலீசார் நேரடியாக சென்று சம்மன் வழங்கி இருந்தனர். இதற்கு ஆஜராகாத நிலையில், மீண்டும் நேற்று விசாரணைக்காக மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் காலை 11 மணிக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவாலுக்கு பதிவுத்தபாலில் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனால் மதுரை போலீஸ் உதவிகமிஷனர் சம்பத் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய விசாரணை குழுவினர், தல்லாகுளம் காவல்நிலையத்தில் விசாரணை செய்வதற்காக தயார் நிலையில் நேற்று காத்திருந்தனர்.

ஆனால் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ஆஜராகவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘2 முறை சம்மன் அனுப்பியும் அதிகாரி ஆஜராகவில்லை. இன்னொரு தேதி ஒதுக்கி, அப்போது வரும்படி அழைக்கப்படுவார். மும்முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், வாரன்ட் பெற்று நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது. அமலாக்கத்துறையினரிடம் விசாரணை முடிந்த பிறகு, லஞ்ச ஒழிப்பு போலீசாரையும் மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றனர்.

* அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்கு
லஞ்சம் வாங்கி கைதான அமாலக்கத்துறை விசாரணை அதிகாரியான அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், லஞ்ச விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அங்கித் திவாரிக்கும், புகார்தாரர் டாக்டர் சுரேஷ்குமாருக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட உள்ளது.

You may also like

Leave a Comment

eleven − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi