*மதகுகளை இயக்கி சரிபார்த்தனர்
கூடலூர் : புதிய துணை கண்காணிப்புக் குழுவினர் பெரியாறு அணையை நேற்று ஆய்வு செய்தனர்.உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெரியாறு அணையை கண்காணிக்க, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில், தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் கடந்த மார்ச் 22ம் தேதி பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். அதன் பின்பு தேக்கடியில் ஆய்வு கூட்டமும் நடத்தி அதன் அறிக்கையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.
தற்போது கடந்த 10 நாட்களாக கனமழை பெய்ததன் காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி விட்டது. இதையடுத்து நேற்று தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் தலைமையிலான துணைக்குழுவினர், தேக்கடி படகு துறையில் இருந்து படகின் மூலம் அணை பகுதிக்குச் சென்று அங்கு பிரதான அணை, பேபி அணை, சுரங்கப் பகுதி, நீர்வழிப் போக்கிகள், மதகுகளை இயக்கி பார்த்தல், வல்லக்கடவு பாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும் பேபி அணையின் கீழ் பகுதி வரை சென்று பார்வையிட்டனர்.
தலைவர் கிரிதர் தலைமையில், துணை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக அரசின் பிரதிநிதிகளான தமிழக நீர்வளத்துறையின் பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கேரள நீர்ப்பாசனத் துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, கோட்டூர் செயற்பொறியாளர் சிஜி ஆகியோர் மற்றும் இரு மாநில அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்த அக். 16ம் தேதி பெரியாறு அணையின் ஆய்வுக்காக சென்ற துணை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த தமிழக தரப்பு அதிகாரிகள், அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் ஆய்வு செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஆய்வை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை
குமுளி அருகே உள்ள பெரியாறு அணை மேற்பார்வை குழு அலுவலகத்தில், புதிய துணைக்குழுவின் தலைவர் கிரீதர் தலைமையில், தமிழக தரப்பு அதிகாரிகளான ஷாம் இர்வின், செல்வம் மற்றும் கேரள தரப்பின் அதிகாரிகளான லெவின்ஸ் பாபு, சிஜி ஆகியோருடன் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அணையில் செய்யப்பட்ட ஆய்வு குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகள் விவாதித்தனர். இக்கூட்டம் பிற்பகல் 3.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஆய்வுக் குழுவின் அறிக்கையும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களும் மத்திய மேற்பார்வை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.