மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேட்டை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர், விசாரித்து அறிக்கை அளித்தனர். இந்த வழக்குமதுரையிலுள்ள கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு சகாயத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. உடல்நிலை, குடும்ப சூழல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசாரணைக்கு ஆஜராவதை சகாயம் தவிர்த்து வந்தார். இதைத் தொடர்ந்து, சகாயம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என கடந்த மே 5ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரோகிணி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வக்கீல் சிவக்குமார் ஆஜராகி, ‘‘அரசு தரப்பு சாட்சியான சகாயம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஜராகவில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘அரசு தரப்பு 37வது சாட்சியான அப்போதைய கலெக்டர் சகாயம், வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும். அப்போது அவருக்கு தேவையான பாதுகாப்பை சம்பந்தப்பட்ட போலீசார் வழங்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை ஜூலை 21க்கு தள்ளி வைத்தார்.