புதுடெல்லி: தேர்தலின் போது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக, விண்ணப்பத்தோடு இணைத்து அனைத்து வாக்கு மூலங்களும் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்ததாக பி.மிலானி என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்தது. மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பி.மிலானி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எ.வேலன், “இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சட்ட விதிமுறைகளை கருத்தில் கொள்ளாமல் எப்.ஐ.ஆரை ரத்து செய்துள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தை பொறுத்தவரை நீங்கள் அதாவது மனுதாரர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை தாக்கல் செய்தபோது அதோடு அபிடவிட் (வாக்கு மூலங்கள்) தாக்கல் செய்யவில்லை. எனவே தற்போது உங்களது விண்ணப்பத்தோடு அனைத்து விவரங்களும் அடங்கிய அபிடவிட்டை இணைத்து மீண்டும் மனு தாக்கல் செய்யுங்கள். அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்த நடவடிக்கைகளை மாஜிஸ்ட்ரேட் மேற்கொள்வார்” என்று தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.