பெங்களூரு: ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மஜத சார்பில் போட்டியிட்டு பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி ஆனார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா மட்டுமே மஜத கட்சியை சேர்ந்த ஒரே எம்.பி ஆவார். பாஜவை சேர்ந்த ஏ.மஞ்சு மற்றும் வழக்கறிஞர் ஜி.தேவராஜே கவுடா ஆகிய இருவரும் பிரஜ்வல் ரேவண்ணாவின் வெற்றியை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், பிரஜ்வல் ரேவண்ணா தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், தேர்தல் ஆணையத்திடம் தனது முழு சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல் ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணாவை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பிரஜ்வல் ரேவண்ணாவின் மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் மனோஜ் மிஷ்ரா மற்றும் ஜே.பி.பர்திவாலா அடங்கிய அமர்வு, பிரஜ்வல் ரேவண்ணாவை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்து, அவர் தொடர்ந்து எம்.பி-யாக பணியாற்ற அனுமதியளித்தது.