நாகர்கோவில்: குமரி மாவட்டத்துக்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: ‘நடிகர் விஜய் பாசிச, மதவாத சக்திகளிடம் மாட்டி கொள்ளக்கூடாது. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பதெல்லாம், அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.
காங்கிரஸ் எல்லோருக்குமான கட்சி, ஜனநாயகத்துக்கான கட்சி, தேர்தலுக்கு மட்டுமான கட்சி இல்லை. தேசம் மற்றும் மக்களுக்கான கட்சி இது. இப்படி உயர்ந்த கொள்கை, கோட்பாடுகளை கொண்ட கட்சி என்பதால் காங்கிரஸ் குறித்து விஜய் எந்த விமர்சனமும் செய்யவில்லை.வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும்.
திருப்புவனம் அஜித்குமார் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசை கேட்டு கொண்டுள்ளோம். அவரது சகோதரருக்கு ஆவின் துறையில் காரைக்குடி பகுதியில் வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர் மதுரையில் பணி மாற்றம் வேண்டும் என கேட்டுள்ளார். இதை முதல்வரிடம் நான் கோரிக்கையாக வைக்கிறேன். முதலமைச்சரை நேரில் சந்தித்தும் இதுகுறித்து பேசுவேன் என்றார்.