சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8ம் தேதி மதுரை வருகிறார். பேரவை தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு, ஏற்கனவே கூட்டணி அமைத்த கட்சிகளுடன் முழு பலத்தோடு களம் காண்கிறது. பாஜவோடு கூட்டணியை முறித்திருந்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் அதிமுக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8ம் தேதி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின் போது பாஜவின் தென் மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 16 கி.மீ. தொலைவுக்கு `ரோடு ஷோ’ சென்று மக்களை சந்தித்தார். இந்த சூழ்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் வரும் 8ம் தேதி மதுரைக்கு வருகிறார். மதுரை ஒத்தக்கடையில் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரை வருகையின் போது கூட்டணி மற்றும் தேர்தல் சம்பந்தமாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. கடந்த மாதம் அமித் ஷா சென்னை வந்த போது, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை சந்திக்கவில்லை. ஆனால் பாஜவினர் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் என்டிஏ கூட்டணியிலேயே இருப்பதாக கூறி வருகின்றனர். தங்களை அமித் ஷா சந்திக்காதது வருத்தம் என்பதையும் ஓபிஎஸ் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
ஆனால் எடப்பாடிக்கு ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சேர்த்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றே கூறப்படுகிறது. அவர் அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளை பார்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் மதுரை பயணத்தின் போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அமித் ஷா சந்திப்பார் என்று பாஜவினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. அதேபோன்று பேரவைத் தேர்தலில் பாஜ போட்டியிடும் இடங்கள் தொடர்பான முடிவினை எடுக்கவும் அமித்ஷா ஆலோசிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.