புதுடெல்லி: மத்தியப்பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு பொது செயலாளராக ரன்தீப் சுர்ஜிவாலா மற்றும் உத்தரப்பிரதேச மாநில தலைவராக அஜய்ராய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றம் செய்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கட்சியின் பொது செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\” மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக(பொறுப்பு), கர்நாடகா காங்கிரஸ் பொறுப்பாளரான ரன்தீப் சுர்ஜிவாலாவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் கடந்த 2014, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்எல்ஏ அஜய் ராய் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் காங்கிரஸ் பொது செயலாளராக(பொறுப்பு) முகுல் வாஸ்னிக் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.