சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்,’தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். கொலை, கொள்ளை, சைபர் கிரைம், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றை கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் கடுமையான மழை பெய்யப்போகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அரசு தீவிரமான ஆலோனையுடன் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து, மக்களை காப்பாற்றிட வேண்டும். மாநகராட்சி சொத்து வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, தமிழக விவசாயிகளும், கர்நாடகா விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில் ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறுகின்ற வகையில் தீர்வுகாண வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சம்பளம் உயர்வும், ஆசியர்களுக்கு பழைய ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களுடைய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வர இருக்கின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை அமைத்து 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும்’ உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.