புதுடெல்லி: மகாராஷ்டிரா, அரியானா, ஜம்மு – காஷ்மீருக்கு ஒரே நேரத்திலும், ஜார்கண்டுக்கு தனியாக சட்டப் பேரவை தேர்தல் நடத்த ேதர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரியானா – நவம்பர் 3ம் தேதி, மகாராஷ்டிரா – நவம்பர் 26ம் தேதி, ஜார்கண்ட் – ஜனவரி 5ம் தேதிகளுடன் தற்போதுள்ள சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் முடிவடையும். மேற்கண்ட 3 மாநிலங்களில் பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தொகுதிகள் வரையறுக்கப்பட்டதால், அங்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் கமிஷன் குழு அரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களுக்கும் சென்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மகாராஷ்டிரா, ஜம்மு – காஷ்மீர், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. கடந்த மூன்று முறையாக அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அதற்கு முன் இந்த மாநிலங்களில் தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த முறை மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்கள் தனித்தனியாக நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று காலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் குழு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா சட்டசபை தேர்தல் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் கமிஷன் குழுவினர் கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆய்வு செய்தனர். ஜம்மு – காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது தொகுதி வரையறை முடிந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயநாடு இடைத்தேர்தல்
மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். இதனையடுத்து ரேபரேலி தொகுதி எம்பி பதவியைத் தக்க வைத்துக் கொண்டு, வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மகாராஷ்டிரா, அரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுடன், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறக் கூடும் என்று கூறப்பட்டது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதால், வயநாடு இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பும் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.