புதுடெல்லி: சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா, மிசோரம், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. ராஜஸ்தான், மிசோரம், மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் தேர்தல் ஆணைய குழு ஏற்கனவே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. இதனை தொடர்ந்து 5 மாநில தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இதனையொட்டி தேர்தல் பார்வையாளர்களுக்கான கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகின்றது.
இந்த கூட்டத்தில் காவல்துறை, பொது மற்றும் செலவின கண்காணிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். தேர்தலில், தேர்தல் நடத்தை விதிகளை சிறப்பாக செயல்படுத்தவும், பண பலமும், ஆள் பலமும் இடையூறு செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும். இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.