திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவில் ஏற்கெனவே மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே பல விவகாரங்களில் மோதல்கள் தொடர்ந்து வருகிறது. கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது குறித்து ஆளுநருக்கும் கேரள மாநில அரசுக்கும் இடையில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. கேரள ஆளுநர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
சங்பரிவார் கொள்கைகளின் அடிப்படையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் செயல்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கேரள சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் ஓராண்டாகவும் நிலுவையில் உள்ளதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது. மசோதா நிலுவை தொடர்பாக நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது கேரள மாநில அரசும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஏற்கெனவே பஞ்சாப், தெலங்கானா அரசுகள் சார்பில் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.