ஈரோடு: எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுகவின் 31வது பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு செங்கோடம்பாளையம் பள்ளம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அ.கணேசமூர்த்தி நினைவரங்கத்தில் நடைபெற்றது. கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
-
- திராவிட இயக்கத்துக்கு எதிரான பகை சக்திகள் தமிழ்நாட்டை கைப்பற்ற முனைந்து வரும் சூழலில், தேர்தல் கூட்டணி தொடர்பாக 2017ம் ஆண்டு மதிமுக எடுத்த முடிவை எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் கடைபிடிக்கும்.
- இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமை திறனோடு வழி நடத்தும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக சார்பில் பாராட்டுகள் தெரிவிப்பது.
- 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென மதிமுக பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
- எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளை கூட்டணியில் பெற்று போட்டியிடுவது, வருகிற ஜூலை முதல் டிசம்பர் வரை மண்டல வாரியாக திராவிட பயிலரங்கம் நடத்துவது.
- பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ்நாடு மக்களின் கடமை என மதிமுக வலியுறுத்துகிறது.
- டெல்லியில் குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் மதராசி கேம்ப் மக்களுக்கு நியாயம் கிடைத்திட அனைத்து பகுதி மக்களும் குரல் கொடுக்க வேண்டும்.
- டெல்லி மாநில நிர்வாகத்திடம் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிதி உதவியை ஒன்றிய அரசு முழுமையாக விடுவிக்க வேண்டும். வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
- தமிழ்நாட்டில் பாஜவின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
- இஸ்ரேல், ரஷ்யா ேபான்ற நாடுகள் நடத்தும் மனித குலத்துக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் புற்றீசல்கள் போல முளைத்துள்ள மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும்.
- மறைந்த மதிமுக எம்பியான கணேசமூர்த்தியின் பெயரை, அவர் ஈரோட்டில் வாழ்ந்த பெரியார் நகர் முதன்மைச் சாலைக்கு சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாஜ தலைவர்கள் உளறல் பேச்சு: கூட்டணி விவகாரத்தில் திமுக முடிவை ஏற்போம்; வைகோ உறுதி
பொதுக்குழு கூட்டத்துக்குபின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் ஜூன் 29ம் தேதி நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. திருச்சியில் செப்டம்பர் 15ல் மாநில மாநாடு நடக்கிறது.
கூட்டணி என்பது கொள்கைக்கானது; லட்சியத்திற்கானது. திமுகவுடன் கூட்டணி என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறோம். வரும் தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும். திமுக பற்றி அன்புமணி கூறும் கருத்திற்கு நான் பதில் செல்லமுடியுமா?. அவரின் தந்தையார் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அன்புமணி இருக்கிறார். 8 எம்எல்ஏ இருந்தால் கட்சி அங்கீகாரம் கிடைக்கும். எவ்வளவு தொகுதிகளை பெறுவோம் என்பது கூட்டணி பேச்சுவார்த்தையில்தான் தெரியும்.
கூட்டணி ஆட்சி குறித்து 1996ல் மதிமுக, மார்க்சிஸ்ட், ஜனசக்தி கூட்டணி வைத்தபோது, தமிழ்நாடு அரசியலில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என மதிமுக முதல் முறையாக அறிவித்தது. அதற்கு பிறகு எந்த தேர்தலிலும் கூட்டணி ஆட்சி குறித்து நாங்கள் சொன்னதில்லை. கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு ஆதரவு அளிப்போம். கேவலமான கருத்துக்களை பேசுவதில் அமித்ஷா வல்லவர். தமிழிசை சௌந்தரராஜன் நினைத்ததையெல்லாம் பேசுவார். நயினார் நாகேந்திரன் பொறுப்பிற்கு வந்தவுடன் தேவையில்லாமல் உளறிக்கொண்டிருக்கிறார். சம்பந்தமில்லாமல் திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி பேசிக்கொண்டிருப்பதாக புதிர் அவிழ்த்து விடுவது பொறுப்பற்ற தன்மை.
அப்படிப்பட்ட பேச்சுவார்த்தை நடக்கவும் இல்லை; நடக்கவும் நடக்காது. திமுக கூட்டணி வலுவான கூட்டணி. திமுகவிற்கு செல்வாக்கு வளர்ந்துள்ளது. திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும். திருமாவளவன் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என பலமுறை உறுதியாக சொல்லியிருக்கிறார். 2026ல் மீண்டும் மக்கள் நலக்கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
கடவுள் பெயரில் கட்சி மாநாடா?
வைகோ கூறுகையில், ‘இந்து கடவுளின் பெயரில் ஒரு கட்சி மாநாடு நடத்துவது தவறானது. இந்த மாநாட்டு மூலம் இந்து வாக்கு வங்கியை உருவாக்க முடியாது. இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை பராமரிக்கிறது அதற்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதுவரை அரசியல் கட்சி கடவுளின் பெயரில் மாநாடு நடத்தியதில்லை. இந்த மாநாட்டிற்கு பின்னால் பாஜ, இந்துத்துவா சக்திகள் உள்ளது’ என்றார்.