விழுப்புரம்: பெண்ணை தாக்கி செயின் பறித்த வழக்கில் பாஜ முன்னாள் செயலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் அருகே மரகதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன், மனைவி கலையரசி (35) மற்றும் கைக்குழந்தையுடன் பைக்கில் கடந்த 2021 ஏப்ரலில் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கலையரசி மருந்து சீட்டை வீட்டில் வைத்துவிட்டு வந்ததாக கூறியுள்ளார். கைக்குழந்தையுடன் கண்டையமடை கிராமம் அருகில் கலையரசியை நிற்க வைத்துவிட்டு மருந்து சீட்டை எடுக்க முத்துக்குமரன் சென்றுள்ளார். அப்போது கலையரசியை மர்ம நபர் தடியால் தாக்கி 11 பவுன் செயினை பறித்து சென்றுள்ளார். புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறித்த கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளகிராம்பட்டு பகுதியை சேர்ந்த பாஜ முன்னாள் நகர செயலாளர் அறிவழகனை (48) கைது செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வன் விசாரித்து அறிவழகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.