டெல் அவிவ்: ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை காரணமாக ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஹமாஸ் அமைப்பினர் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டதால், ஈரான் – இஸ்ரேல் இடையிலான நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. தற்போது இஸ்ரேலை ஈரான் வெளிப்படையாக மிரட்டியுள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரானின் உச்ச தலைவர் கமேனி மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளில் தனது ராணுவ தலையீட்டை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் ராணுவ அமைப்பான பென்டகன் வெளியிட்ட தகவலின்படி, மத்திய கிழக்கு நாடுகளில் போர் விமானங்களை நிலைநிறுத்த வேண்டும் என்றும், அப்ேபாது தான் அங்குள்ள நிலைமையை பராமரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கண்ட அறிக்கையின்படி பார்த்தால், இஸ்மாயில் ஹனியாவின் படுகொலைக்கு பின்னர் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க ஏற்கனவே தயாராக இருக்கும் அமெரிக்கா, தற்போது போர் விமானங்களை மத்திய கிழக்கு பகுதியில் நிலை நிறுத்த முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். அப்போது இஸ்ரேல் பிரதமருக்கு அவர் உதவுவதாக உறுதியளித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், தற்போதைய போர் விமானங்களை நிலை நிறுத்தும் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இஸ்ரேல் மீது ஈரான் வீசிய பல ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் நடுவழியில் அழித்தது. அதே நேரம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் மீதான அடுத்தடுத்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தால் அமெரிக்காவும் கவலை அடைந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் அளித்த பேட்டியில், ‘ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூசர்கள் மற்றும் நாசகார கப்பல்கள் அனுப்பப்படும். யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவை, மத்திய கிழக்கில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த போர் விமானம் ஓமன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்படும். ஈரானில் இருந்து தாக்குதல் நடந்தால், ஓமனில் இருந்து நேரடியாக கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.
இதனை உறுதிப் படுத்தும் விதமாக, ஈரானின் சவாலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக ஜோ பைடன் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஹவுதிகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புடன் போரிடுவதில் அமெரிக்கா பின்வாங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம் எச்சரிக்கை
சமீப நாட்களாக இரண்டு ஹமாஸ் தலைவர்களும், ஒரு ஹிஸ்புல்லா தளபதியும் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டனர். அதனால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருக்கும் இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.