கவுகாத்தி: அசாமில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பியபோது குளத்தில் விழுந்து பலியானார். இந்நிலையில் அவரது இறுதி சடங்கை கிராமத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அசாமின் நாகோன் மாவட்டத்தில் போர்பெட்டி பகுதியை சேர்ந்த 14வயது சிறுமி வியாழனன்று மாலை டியூசன் சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் சிறுமியை சுற்றிவளைத்தனர்.
இதனையடுத்து சிறுமியை கடத்தி சென்ற அந்த மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுயநினைவை இழந்த நிலையில் சாலையோரத்தில் கிடந்த சிறுமியை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான இளைஞரை வெள்ளியன்று கைது செய்தனர். நேற்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்திற்கு கைவிலங்கிட்டு இளைஞரை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய அவர் அருகில் இருந்த குளத்தில் குதித்தார்.
இதனை தொடர்ந்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பின் இளைஞரின் சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதனிடையே இளைஞரின் இத்தகைய நடவடிக்கையால் கிராமத்தினர் மிகுந்த அவமானமடைந்துள்ளனர். கிராம மக்கள் ஒன்றிணைந்து 3 முக்கிய முடிவுகளை ஒருமனதாக எடுத்துள்ளனர்.
இதன்படி, கிராமத்தின் இடுகாட்டில் அவரது இறுதி சடங்கை நடத்த அனுமதிக்க கூடாது, இறுதி பிரார்த்தனையில் யாரும் பங்கேற்க கூடாது, அவரது குடும்பத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். சிறுமி பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவான மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
* சிறுமிகளிடம் அத்துமீறியவர் மீது துப்பாக்கி சூடு
அசாமின் சோனித்பூர் மாவட்டத்தின் ஒருபகுதியில் நேற்று முன்தினம் மாலை இரண்டு சிறுமிகள் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் சிறுமிகளை துஷ்பிரோயகம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி, உதை கொடுத்து போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
இருவரும் சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்து செல்லப்பட்ட போது ஒரு வாலிபர் காவலரை தாக்கி விட்டு, அவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கி, காவலர்கள் மீதுசுட்டார். பதிலுக்கு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.