கவுஹாத்தி: அசாமில் புதிய தீவிரவாத குழுவை உருவாக்க முயன்ற இளைஞர்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். அசாம் மாநிலத்தில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, போடோலாந்து விடுதலை புலிகள், சுர்பி குழுக்கள், புரூ தீவிரவாதிகள், தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி உள்பட பல்வேறு தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில குழுக்களை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. மேலும் பல குழுவினர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்துள்ளனர். இந்நிலையில் அசாமில் புதிய தீவிரவாத குழுவை உருவாக்க முயன்ற 10 இளைஞர்கள் பாதுகாப்பு படையினரிடம் நேற்று சரணடைந்தனர்.
இதுகுறித்து அசாம் காவல்துறை தன் எக்ஸ் பதிவில், “ கர்பி அங்லாங் காவல்துறை எடுத்த நடவடிக்கையில் அசாமில் புதிய தீவிரவாத குழுவை உருவாக்க முயன்ற 10 இளைஞர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்தனர். மேலும் அவர்கள் ஒரு ஏகே ரக துப்பாக்கி, 3 கைத்துப்பாக்கி, 1 கையெறி குண்டு, வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை ஒப்படைத்தனர்” என தெரிவித்துள்ளது.