ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப்போட்டியில் வில்வித்தையில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்க பதக்கம் வென்றது. ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பர்னீத் கவுர் ஆகியோர் கொண்ட மகளிர் அணி தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப்போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா என 45 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மொத்தம் 40 வகையான விளையாட்டுகளில், 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் சுமார் 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆசிய விளையாட்டுப்போட்டி கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் சீன தைபே அணியை 230க்கு 228 புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளது. ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பர்னீத் கவுர் ஆகியோர் தங்கப்பதக்கத்தை தட்டிதூக்கினர்.
இதன்மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையும் இந்தமுறை அதிகரித்து வருகிறது. நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது.
2018ல் இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் நடந்த தொடரில் இந்தியா 70 பதக்கங்களை குவித்ததே நமது அணியின் அதிகபட்ச பதக்க வேட்டையாக இருந்தது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மேலும் தங்க பதக்கங்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.