சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தொடர் சென்னையில் நேற்று மாலை கோலாகலமாகத் தொடங்கியது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள், தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியா – ஜப்பான் அணிகள் மோதின. கொரியா ஆரம்பம் முதல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஜப்பான் வீரர் ரியாமா ஊகா 6வது நிமிடத்தில் கோல் அடித்து நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து கொரிய வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
இதன் பலனாக 26வது நிமிடத்தில் கொரிய வீரர் சியோலின் பார்க், களத்தின் நடுவில் இருந்து அதிரடியாக அடித்த பந்து மின்னல் வேகத்தில் வலைக்குள் புகுந்தது. இந்த அற்புதமான ஃபீல்டு கோலால் அரங்கம் அதிர்ந்தது. இடைவேளையின்போது இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. 3வது மற்றும் 4வது குவார்ட்டரிலும் ஆதிக்கம் செலுத்திய கொரிய அணி ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. அந்த கோலை கொரிய வீரர் ஜூங்வூ கிம் அடித்தார். அதன் பிறகு இரண்டு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. பெனல்டி கார்னர் வாய்ப்புகளையும் வீணடித்தன.
ஆட்ட நேர முடிவில் நடப்பு சாம்பியன் கொரிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டத்திற்கு பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஜப்பான் வீரர் ரியாமா ஊகாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். ஆட்டத்தின் சிறந்த வீரருக்கான விருதை கொரிய வீரர் ஜிக்வாங் ஹியன் பெற்றார். அவருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விருது வழங்கினார்.