குமி: 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தென்கொரியாவின் குமி நகரில் மே 27ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்கள் அடங்குவர். முதல் நாளில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவை சேர்ந்த குல்வீர் சிங் தங்கம், 20 கிமீ நடை பந்தய போட்டியில் தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் வெண்கலம் வென்றனர். நேற்று நடந்த 400 மீ, 1500 மீ ஓட்டத்தில் ரூபல் சவுத்ரி, பூஜா வெள்ளி, 1,500 மீ ஓட்டத்தில் யூனஸ் ஷா வெண்கலம், டெகாத்லானில் தேஜஸ்வி சங்கர் வெள்ளி வென்றனர்.தொடர்ந்து மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் 16.90 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். சீன வீரர் ஜுஹூ யாமிங் 17.06 மீ தாண்டி தங்கமும், தென்கொரியாவின் ஜியுமிங் யு 16.82 மீ தாண்டி வெண்கலமும் வென்றனர்.
பின்னர் நடந்த 4×400 மீ கலப்பு ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசன், சந்தோஷ் குமார், தமிழரசன், விஷால் மற்றும் ரூபல் சவுத்ரி ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினர். இப்போட்டியில் 2, 3வது இடங்களை பிடித்த சீனா, இலங்கை தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் கஜகஸ்தான் வெள்ளி பதக்கத்தையும், தென்கொரியா வெண்கல பதக்கத்தையும் பெற்றன. ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை குவித்து வரும் தமிழக வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.