பெய்ஜிங் : சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் 6வது நாளான இன்று இந்தியா 100வது பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற ஆடவர் 400 மீ ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் திலீப் மஹது காவிட் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். திலீப் மஹது கவித் 400மீ தூரத்தை 49.48 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்றார்.இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மொத்தம் 26 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இதுவரை பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா 27 தங்கம், 31 வெள்ளி பதக்கம், 49 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த நிலையில்100 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடியும் தனது பாராட்டை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நமது வீரர்கள் 100 பதக்கங்கள் வென்றுள்ளது இணையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் அதீத திறமை, கடின உழைப்பு, உறுதி ஆகியவையே காரணம்.
இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் நம் இதயங்களை மகத்தான பெருமையால் நிரப்புகிறது. எனது ஆழ்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் முழு ஆதரவு அமைப்புகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிகள் நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுவதாக அவை அமைகின்றன,”என பதிவிட்டுள்ளார்.