சென்னை:7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 ஆண்கள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியா வெற்றிபெற்றது. தொடர்ந்து நடந்த 2வது போட்டியில், மலேசியா 3-1 என பாகிஸ்தானை வென்றது.
3வது லீக் ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனா சாய்த்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார் தலா 2, சுக்ஜீத் சிங் , ஆகாஷ்தீப்சிங்,மன்தீப்சிங் தலா ஒரு கோல் அடித்தனர். 2வது நாளான இன்று 3 போட்டிகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தென்கொரியா- பாகிஸ்தான், 6.15 மணிக்கு சீனா-மலேசியா, இரவு 8.30 மணிக்கு இந்தியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இந்தியா, ஜப்பானுக்கு எதிராக கோல்மலை பொழிந்து வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது.
இதுவரை நேருக்குநேர்…
உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்தியாவும் ஜப்பானும் முதல்முறையாக மோதுகின்றன. கடைசியாக மோதிய போட்டியில் ஜப்பானை 8-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி இருந்தது. இதுவரை 92 போட்டிகளில் இரு அணிகளும் மோதியதில் இந்தியா 82, ஜப்பான் 6ல் வென்றுள்ளன. 4 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2018க்கு பின் மோதி உள்ள 10 போட்டியில் இந்தியா 8, ஜப்பான் 2ல் வென்றுள்ளன.