ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா- சீனா அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜுக்ராஜ் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன் 2011, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்தியா பட்டம் வென்றிருந்தது.
தற்போது 5வது கோப்பையை தன் வசமாக்கியுள்ளது. இதனிடையே இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தனது டுவிட்டர் பதிவில், சீனாவில் நடந்த கடினமான இறுதிப் போட்டிக்குப் பிறகு கோப்பையை மீட்டதில் பெருமிதம். ஒரு குழுவாக வேலை செய்வதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை நாங்கள் எடுத்துக்காட்டுகிறோம், மேலும் எல்லா நேரங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தோம். தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. திரைக்குப் பின்னால் இருக்கும் எங்கள் ஹீரோக்களுக்கு, பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு சிறப்பு நன்றி! ஜெய் ஹிந்த் , என பதிவிட்டுள்ளார்.