Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசியா பேட்மின்டன்: ஆயுஷ் ஷெட்டி ஆதிக்க வெற்றி; காலிறுதியில் நுழைந்தார்

நிங்போ: பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சிறப்பான வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறினார். பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டிகள், சீனாவில் நிங்போ நகரில் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, தைவான் வீரர் சி யு ஜென் உடன் மோதினார். துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ், முதல் செட்டை 21-16 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அட்டகாசமாக ஆடிய அவர், அந்த செட்டையும் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் காலிறுதிச் சுற்று போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டி உடன், ஆயுஷ் ஷெட்டி மோதவுள்ளார்.

* மகளிர் பிரிவில் சிந்து தோல்வி

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் முன்னணி வீராங்கனை வாங் ஜியி உடன் மோதினார். முதல் செட்டில் சிந்து ஈடுகொடுத்து ஆடியபோதும், அந்த செட்டை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் வாங் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனை 21-8 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். இதன் மூலம், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற வாங், காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.