காஞ்சிபுரம்: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று 13 தங்கம், 5 வெள்ளி, உட்பட 19 பதக்கங்களை வென்று காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடந்தது. இதில் சீனா, ரஷ்யா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் இருந்தும், இந்தியாவில் 13 மாநிலங்களில் இருந்தும் 110 மாணவ- மாணவிகள் பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரத்தில் இருந்து தமிழக அணி சார்பில், ஒரு மாணவி உட்பட 8 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்ற தவுலத், ரஞ்சித், அருள்குமார், தமிழ், சபரிஷ் ஆகிய 5 பேரும் தலா 2 தங்கம், தலா 1 வெள்ளி என 10 தங்க பதக்கமும், 5 வெள்ளி பதக்கமும், மாணிக்கம் 2 தங்க பதக்கமும், தமிழிசை 1 தங்க பதக்கமும், கேசவன் 1 வெண்கலம் என மொத்தம் 13 தங்க பதக்கம், 5 வெள்ளி பதக்கம், 1 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.