சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் ஒவ்வொரு அணியும் 4 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இந்தியா (10புள்ளி) மலேசியா (9) ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. சீனா (1) வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் தென் கொரியா (5), முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (5), ஜப்பான் (2) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் உள்ளன.
இந்திய அணி ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறி விட்டதால் நெருக்கடி இல்லாமல் விளையாடும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவுடன் ‘டிரா’ செய்தாலே அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும்.