சியோல்: ஆசிய தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின் வெண்கலப் பதக்கம் வென்றார். தென்கொரியாவில் குமி நகரில் இன்று தொடங்கிய 26வது ஆசிய தடகள போட்டி மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தடகள போட்டியில் இந்தியாவில் இருந்து மொத்தம் 64 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 9 வீரர்கள் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் இருந்து போட்டிகள் தொடங்கியது. இதில் 20 கி.மீ. ரேஸ் வாக் ஆடவர் இறுதிப் போட்டியில் 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ. இலக்கை கடந்து செர்வின் வெண்கலம் பதக்கம் வென்றார்.
அதைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர். ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் பிரவீன் சித்ரவேல், 4×100 ரிலே போட்டியில் தமிழரசு, ராகுல் குமார் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த ரிலே போட்டியுடன் சேர்த்து கலப்பு ரிலே போட்டியில் விஷால், சந்தோஷ் குமார் ஆகியோர் களம் காண்கின்றனர். 400 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் பிரிவில் வித்யா ராம் ராஜ் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.