தாய்லாந்து: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கம் வென்றார். 23 வயதான ஜோதி யாராஜி 13.09 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். அடுத்தடுத்த இடங்களை ஜப்பான் வீராங்கனைகள் பிடித்தனர்.
நான்காவது இடத்தை இந்தியாவின் நித்யா ராம்ராஜ் பெற்றார். அதேபோல் 1500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் அஜய்குமார் சரோஜ் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். அதேபோல் மும்முறை தாண்டுதலில் கேரளாவைச் சேர்ந்த அபுபக்கர் அப்துல்லா தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரே நாளில் மூன்று தங்கம் உள்பட வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். 400 மீட்டர் ஓட்டத்தில் 49.09 வினாடிகளில் இலக்கை கடந்து தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கலம் பதக்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம் ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது. 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.