கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இலங்கை அணி முதல் போட்டியில் 31ம் தேதி பல்லேகலவில் வங்கதேசத்துடன் மோத உள்ளது. தொடர்ந்து 5ம் தேதி லாகூரில், ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. ஆசிய கோப்பை தொடர் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், 2 வீரர்கள் காயம், 2 பேருக்கு கொரோனா தொற்றால் இலங்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் துஷமந்தா சமீரா, சமீபத்தில் முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது தோள்பட்டையில் காயம் அடைந்தார்.
தொடையில் காயம் ஏற்பட்ட லெக்-ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா குறைந்தது 2 போட்டியில் ஆட முடியாது. இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் குசல் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். 5 நாட்களுக்குள் அவர்கள் குணமடைந்து அணியில் சேர்க்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த 2 நாட்களில் அவர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் தான் அணியில் சேர்க்கப்படுவார்கள். இதனால் அணி அறிவிப்பும் தாமதமாகி உள்ளது.