புதுடெல்லி: கடந்த வாரம் லண்டனில் நடந்த இங்கிலாந்து -இந்தியா அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஒத்துழைப்பு குறித்த இந்தியா குளோபல் போரமில் பேசிய ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல், ஆசியான் நாடுகளுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்வது என்பது முட்டாள்தனம். அவர்களில் பலர் இப்போது சீனாவின் பி அணியாக மாறிவிட்டனர் என்று கூறியிருந்தார். இந்திய-ஆசியான் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிரான கோயலின் கருத்துக்களை காங்கிரஸ் கடுமையாக சாடியது. சீனாவின் பி அணி என்று முத்திரை குத்துவது பொறுப்பற்றது மற்றும் அவமானகரமானது என்று கூறியிருந்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், ஆசியான் நாடுகளை சீனாவின் பி அணி என்று விமர்சித்த ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்துக்கு ஆசியான் துணை தலைவர் அதிருப்தி தெரிவித்த ஊடக அறிக்கையை இணைத்திருந்தார். மேலும் அவர் தனது பதிவில், இது இந்திய ராஜதந்திரத்துக்கு கிடைந்த மற்றொரு அடியாகும். இது தேவையற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.