*21 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக நடக்கிறது
நாகர்கோவில் : ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 1000 மருத்துவ மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பன்முக தன்மை பயிலரங்கம் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில், மருத்துவ மாணவ, மாணவிகளுக்கான பன்முக தன்மை பயிலரங்கம் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராமலெட்சுமி தலைமை வகித்தார்.
குமரி அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வரும், தற்போது குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரி முதல்வருமான டாக்டர் கண்ணன், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சுரேஷ்பாலன், இந்திய மெடிக்கல் அசோசியேசன் அகில இந்திய முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயலால், குமரி மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவர் (பொறுப்பு) டாக்டர் விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனிமோள், மருத்துவ பேராசிரியர் டாக்டர் சுதா மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், டாக்டர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மட்டுமின்றி தேனி, மதுரை, சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவ மாணவ, மாணவிகள் என சுமார் 1000 பேர் பங்கேற்றுள்ளனர். வருகிற 11ம் தேதி வரை 3 நாட்கள் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன.
மருத்துவ மாணவர்களுக்கு பொது அறிவு வினாடி வினா, கல்வி சார்ந்த கருத்தரங்கம், ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தல், வரலாற்று ஆய்வரங்கம், மருத்துவம் சார்ந்த கருத்துரைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு சுமார் 21 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது முதல் முறையாக பன்முக தன்மை பயிலரங்கம் நடக்கிறது. இது கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியின் வரலாற்றில், இந்த நிகழ்வானது குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையும் என டாக்டர்கள் கூறினர்.
ஐஎம்ஏ முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் ஜெயலால் பேசுகையில், பன்முக தன்மை மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு அவசியம் ஆகும். ஓவியம், கலைகள், வரலாறுகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அந்தந்த மாவட்ட வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் சதாவதானி செய்கு தம்பி பாவலர் உள்பட பல்வேறு தலைவர்கள் உள்ளனர். இவர்களின் வரலாறுகளை மருத்துவ மாணவ, மாணவிகளும் அறிய வேண்டும் என்றார்.
வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும்
முன்னதாக நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராமலெட்சுமி, மருத்துவ படிப்பில் அடியெடுத்து வைத்ததும், உலகமே மருத்துவம் என மாறி விடுகிறது. வெளி உலகில் நடப்பதை மருத்துவ மாணவ, மாணவிகள் அறிவது இல்லை. அவ்வாறு இல்லாமல் பன்முக தன்மை கொண்டவர்களாக விளங்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.